தமிழகத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில் இன்று முதல் துறை வாரியான ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இதன் தொடக்கமாக, கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தற்போது செயல்பாட்டில் உள்ள மக்கள் நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பைப் படிப்படியாக உயர்த்துவது பற்றி மிக முக்கியமான முடிவு எடுக்கப்படும் எனத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் தற்போதே துறை வாரியாக அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனையில் இறங்கியிருப்பது, வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிரடியான மற்றும் பல பயனுள்ள அறிவிப்புகள் வெளியாகப் போகிறது என்பதை உறுதி செய்துள்ளது.
