அயர்லாந்து அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் கண்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தத் தொடர் பெரும் ஏமாற்றமாக முடிந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து அணி, இந்தியாவை 2-0 என்ற கணக்கில் ‘கிளீன் ஸ்வீப்’ செய்து அதிர்ச்சியளித்தது. கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணி எதிர்கொண்ட முதல் இருதரப்பு டி20 தோல்வி இதுவாகும்.
இதன் மூலம், கடந்த 16 தொடர்களாக தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்திய அணியின் அசுர ஓட்டத்திற்கு அயர்லாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய அணியால் ஏன் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியவில்லை, எங்கே தவறு நடந்தது என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது முறையான மற்றும் துல்லியமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
Champion wicket keeper Dinesh Kartik gives the perfect reason behind the defeat against Ireland 🇮🇪 pic.twitter.com/vOZHQ25ZXE
— Rajat Patidar fc (@patidarverse) June 30, 2026
இதுகுறித்து பேசிய ‘டிகே’, “இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்கு ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக இருக்கலாம். வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை முடித்துவிட்டு உடனடியாக இங்கு வந்துள்ளனர். ஐபிஎல் தொடரின் போது நீண்ட தூரப் பயணங்கள் இருந்ததால், வீரர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் கடும் சோர்வடைந்து காணப்பட்டனர். அதன் வெளிப்பாடே அயர்லாந்து தொடரில் எதிரொலித்தது. வீரர்களுக்கு போதிய ஓய்வு தேவை. அதேபோல், நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்தியா விளையாடியதால், அயர்லாந்தின் ‘ஸ்பாஞ்சி’ பிட்ச் தன்மையை இந்திய வீரர்களால் கணிக்க முடியவில்லை.
பந்துகள் எழும்பி வந்ததால், நின்று நிதானமாக ஷாட்களை அடிக்க முடியாமல் திணறினர். தங்களது திறமையை வெளிப்படுத்த 20 ஓவர்கள் இருந்தும், இந்திய அணியால் சுதாரித்துக் கொள்ள முடியவில்லை. மாறாக, அயர்லாந்து வீரர்கள் துல்லியமாக கேட்சுகளைப் பிடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர் என்று கூறினார். மேலும், இந்திய அணியின் எனர்ஜி லெவல் மிகக் குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், ஐபிஎல் விளையாடாமல் புது உத்வேகத்துடன் களமிறங்கிய ஹர்ஷித் ராணாவும், அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவும் மட்டுமே களத்தில் சுறுசுறுப்பை வெளிப்படுத்தினர் என்றும், வீரர்களின் சோர்வைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
