மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள ஜர்காவ் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், மொரினா பகுதியைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் 29 அன்று மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமண முடிந்து, கண்ணீருடன் விடைபெற்று கணவர் வீட்டிற்கு வந்த நம்ரதா, அங்கு வெறும் ஒரே ஒரு இரவு மட்டுமே தங்கியிருந்தார். ஜூன் 30 அதிகாலை 4 மணியளவில், வீட்டில் உள்ள அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், நம்ரதா தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக் கொண்ட அவர், தப்பிப்பதற்காக வீட்டின் இரண்டாவது மாடிக்குச் சென்றுள்ளார்.

பாதுகாப்பிற்காக வீட்டின் அனைத்துக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்ததால், சினிமா பாணியில் அதிரடி முடிவை எடுத்த நம்ரதா, 2-வது மாடியில் இருந்து சுமார் 23 அடி கீழே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்குத் தலைதெறிக்கக் குதித்துள்ளார். அங்கிருந்து கீழே இறங்கும்போது, ஸ்பைடர்மேன் போல வீட்டின் இரும்பு கிரில்களில் சிலந்தி போலத் தொங்கி, லாவகமாகச் சாலைக்கு வந்து சில நிமிடங்களில் மாயமாகியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த மாப்பிள்ளை ஜிதேந்திரா, மனைவி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கிராமத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, நம்ரதா அதிகாலை இருட்டில் ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஜிதேந்திரா போலீசில் புகார் அளிக்க, போலீசார் நம்ரதாவின் தந்தை ஹீரலாலைத் தொடர்பு கொண்டனர். இதையடுத்து, நம்ரதாவை அழைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினர் காவல் நிலையம் வந்தனர். அங்கு வைத்து அவர்கள் நம்ரதாவைச் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் திடீரென “நான் என் கணவருடனேயே வாழ விரும்புகிறேன்” என யூ-டர்ன் அடித்தார். நம்ரதாவின் குடும்பத்தினரும் ஜிதேந்திராவிற்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், அதற்கு முற்றிலும் மறுத்த மாப்பிள்ளை ஜிதேந்திரா, “திருமணமான சில மணி நேரத்திலேயே நகை, பணத்தைத் திருடிக் கொண்டு மாடியில் இருந்து குதித்து ஓடியவள், எதிர்காலத்தில் என்னைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யக் கூடத் துணிவாள். இவளால் என் உயிருக்கு ஆபத்து, இவளுடன் வாழவே முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறி, தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கேட்டு போலீசில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.