பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் ஜாம்பவான்களின் பெயர்கள்தான் மைதானங்களில் எதிரொலிக்கும். ஆனால், தற்போது இங்கிலாந்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் முகத்திலும் ஒலிக்கும் ஒரே பெயர் 15 வயதே ஆன ‘பாஸ் பேபி’ வைபவ் சூர்யவன்ஷி தான். அயர்லாந்துக்கு எதிரான தொடரைத் தொட்டுக் கூட பார்க்காத ரசிகர்கள், வைபவ்வின் சர்வதேச அறிமுகத்தைக் காண்பதற்காகவே இங்கிலாந்து டி20 தொடரை உச்சக்கட்ட ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்திய அணியில் எத்தனையோ சீனியர் நட்சத்திரங்கள் இருந்தாலும், தற்போது இங்கிலாந்தில் நிலவும் ஒட்டுமொத்த ஹைப் மற்றும் மார்ட்கெட்டிங் எல்லாமே வைபவ்வைச் சுற்றியே சுழன்று வருகிறது.

இந்நிலையில், மைதானத்திற்கு வெளியே வைபவ்விற்கு இருக்கும் அசுரத்தனமான ரசிகர் பட்டாளம் தற்போது அந்த 15 வயது சிறுவனுக்கு ஒரு சிறிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் தங்களின் கேமராக்களுடன் அவரைப் பின்தொடர்ந்து துரத்தி வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கும் வைபவ், நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் பயிற்சி உடையை அணிந்து கொண்டு அவர் மைதானத்தில் ஓடி வரும்போது, அங்கே திரண்டிருந்த ரசிகர்கள் அவரது பெயரை உரக்கக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் இந்த அதீத அன்பைக் கண்டு திடீரென வெட்கப்பட்ட வைபவ், உடனடியாகத் தனது ஜாக்கெட்டிற்குள் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடினார். ஐபிஎல் 2026 தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதோடு, முத்தரப்பு தொடரில் வெறும் 11 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இந்த இளம் சிங்கத்தின் கியூட்டான மறுபக்கத்தைக் காட்டும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.