நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பகுதியில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற ரோடியோ காளை சாகச விளையாட்டின் போது, மொத்த கூட்டத்தையும் உறைய வைக்கும் படியான ஒரு பயங்கர விபத்து அரங்கேறியுள்ளது. சாகசக் களத்தில் 25 வயதுடைய வீரன் ஒருவர், வெறிபிடித்த காளையின் முதுகில் ஏறி அமர்ந்து ஸ்டண்ட் செய்ய முயன்றார். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அந்த காளை திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆக்ரோஷமாக துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.
காளையின் வேகத்தை தாங்க முடியாமல் அந்த சாகச வீரர் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தார். அத்தோடு விடாத அந்த வெறிபிடித்த காளை, தரையில் விழுந்த இளைஞரைத் தன் கால்களால் மிதித்து, தரதரவென இழுத்துச் சென்று துவம்சம் செய்தது. காளையின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அங்கிருந்த பார்வையாளர்கள் அலறியடித்து சத்தம்போட, அந்த இடமே சில நொடிகளில் போர்க்களமாக மாறியது. காளையின் மிதியில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
BULL ATTACK: A 25-year-old man was injured after being bucked off a bull and then stomped on by the animal during a rodeo event in the Bronx. – https://t.co/sXw57qqvRc#News12NY #Bronx pic.twitter.com/LttvKeH1g9
— News 12 New York (@News12) June 30, 2026
துவக்கத்தில் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற விழா அமைப்பாளர்களும், பொதுமக்களும், காளையின் கொடூரம் எல்லை மீறியதை அடுத்து உடனடியாக அந்த இளைஞரைக் காப்பாற்ற களத்தில் குதித்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு, காளையின் பிடியில் இருந்து அந்த இளைஞர் மீட்கப்பட்டு, படுகாயங்களுடன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்துப் பேசிய அந்த இளைஞரின் நண்பர், “என் நண்பன் காளையின் மீது சரியாகத்தான் சாகசம் செய்து கொண்டிருந்தான்.
ஆனால், காளை திடீரென வட்டமடித்து சுழன்றபோது அவன் நிலைதடுமாறி கீழே விழுந்து, அதன் காலடியில் சிக்கி மயங்கிவிட்டான்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த முழுச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரின் உடம்பை சிலிர்க்க வைத்து, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
