தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை தவெகவில் இணைகிறேன்” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து விளக்கியுள்ள அவர், “என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்ற சி விஜயபாஸ்கர் தன்னுடைய எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த நிலையில் அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் தான் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.