பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில், ஆர்ஆர்ஆர் (RRR) புகழ் ஜூனியர் என்டிஆர் முருகக் கடவுளாக நடிக்கவுள்ள புதிய புராணக்கதை திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சூலாயுதத்தில் இருந்து முருக வேல் தோன்றும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்த வேளையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி பதிவிட்ட ஒரு ட்வீட் தமிழ் மக்களிடையே திடீரெனப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகக் கடவுள் குறித்து அவர் பதிவிடுகையில், “வடக்கில் பிறந்து, மையப்பகுதியில் உருவாக்கப்பட்டு, தெற்கில் அதிகம் வழிபடும் கடவுள்” எனக் குறிப்பிட்டது தான் இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும், சோஷியல் மீடியா சண்டைக்கும் முக்கியக் காரணமாக மாறியுள்ளது. ​நாக வம்சியின் இந்த பதிவிற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்ட பலரும், முருகன் தமிழ்க் கடவுள்; அவருக்கு ‘சேயோன்’ என்கிற பெயர் உள்ளது என்றும், தமிழ்நாட்டில் தான் அறுபடை வீடுகள் உள்ளன என்றும் காரசாரமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வட இந்தியாவில் ‘ஸ்கந்தன்’ என்று வழிபடுவதற்காக முருகன் வடக்கில் பிறந்தார் எனக் கூறுவது முற்றிலும் தவறு எனத் தமிழர்கள் வாதிட, டோலிவுட் ரசிகர்களோ சிவன்-பார்வதி இமயமலையில் வசிப்பதால் முருகன் அங்கே தான் பிறந்திருக்க முடியும் எனப் புதுக் கிளப்பைக் கிளப்பியுள்ளனர். கடவுளுக்கு எல்லைகளை வரையறை செய்வது சரியல்ல என்கிற வாதங்களும் ஒருபுறம் எழ, ஜூனியர் என்டிஆரின் புதிய படம் தொடக்கத்திலேயே டோலிவுட் VS கோலிவுட் என இணையத்தைக் களம் காண வைத்துப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.