உலகில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் வேளையில், யாருமே இல்லாத அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு எரிமலை நாள்தோறும் துகள்களாகத் தங்கத்தைக் காற்றில் கக்கி வீணாக்குவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிகாவில் அமைந்துள்ள ‘Mount Erebus’ என்ற இந்த விசித்திரமான எரிமலை, ஒவ்வொரு நாளும் சுமார் 10 சவரன் மதிப்பிலான தங்கத் துகள்களைக் காற்றில் கக்கி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி காற்றில் கக்கப்படும் இந்தத் தங்கத்தின் மதிப்பு மட்டும் ஒரு ஆண்டிற்குத் தோராயமாக 18.9 கோடி ரூபாய் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மனிதர்கள் வாழவே முடியாத மிகக் கடுமையான குளிர் நிலவும் அந்தப் பகுதியில், இந்த எரிமலையில் இருந்து வெளியேறும் தங்கத் துகள்கள் காற்றில் மிதந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பரவிச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு பரவிச் செல்லும் தங்கத் துகள்கள் அனைத்தும், அண்டார்டிகாவின் பரந்த பனிப்பாறைகளின் மீது அப்படியே படிந்து பனியோடு பனியாக உறைந்து வீணாகி வருகின்றன. தங்கத்தை வெட்டியெடுக்க ஒட்டுமொத்த உலகமும் பல கோடிகளைச் செலவழித்து வரும் நிலையில், இயற்கையே இப்படித் தங்கத்தை வாரி இறைத்து வீணடிக்கும் இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
