அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2026 பிஃபா உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு காபி குடிக்க வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. தற்சமயம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர் ஒருவரால் எக்ஸ் தளத்தில் கிளப்பி விடப்பட்ட இந்த போலிச் செய்தி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது.
🚨BREAKING: USA President Donald Trump has re-invited Cristiano Ronaldo for a cup of coffee at The White House after the World Cup. pic.twitter.com/18pnYkGBoF
— Fanbrizio Rovaldo (@FabrizioRomaxno) June 28, 2026
ஆனால், அதிபர் டிரம்போ அல்லது அவரது வெள்ளை மாளிகை நிர்வாகமோ, ரொனால்டோவுக்கு இப்படி ஒரு பிரத்யேக அழைப்பை விடுத்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையே நல்லதொரு நட்பு நீடித்து வருவது உண்மைதான். கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பிரம்மாண்ட இரவு விருந்தில், சவுதியின் அல்-நாசர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது டிரம்ப், தனது பேரனை ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்று கூறி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் பழைய சந்திப்பையும், தற்சமயம் அமெரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பைத் தொடரையும் இணைத்து, வியூஸ்களுக்காகவும் லைக்குகளுக்காகவும் நெட்டிசன்கள் இந்த காபி அழைப்பு வதந்தியைப் பரப்பியுள்ளது அம்பலமாகியுள்ளது.
