2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில், 37 வயது இளம் பெண்ணுக்கு லேப்ராஸ்கோபிக் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அவருக்குக் கடுமையான வயிற்று வலி, உடல் அமைதியின்மை மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவர் நோயாளியின் வயிற்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு லிட்டர் திரவத்தை வெளியேற்றிய போதிலும், அந்தத் திரவக் குவிப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியாமலும், உரிய சிகிச்சையைத் தாமதப்படுத்தியும் அவரை மேல் சிகிச்சைக்காகக் வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட குடல் பாதிப்பால் மாசுகள் வயிற்றுக்குழிக்குள் கசிந்து, கடுமையான தொற்று மற்றும் பல உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு அந்தப் பெண் மார்ச் 23 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மனைவியின் மரணத்திற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக் கூறி அவரது கணவர் தொடர்ந்த வழக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரித்த தெலங்கானா மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், அறுவை சிகிச்சை செய்வதோடு மருத்துவரின் பொறுப்பு முடிந்து விடுவதில்லை என்றும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணத் தவறியது மருத்துவ அலட்சியமே என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றக் கொள்கைகளின் அடிப்படையில் சேதத்தொகையைக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட கணவருக்கு 45 நாட்களுக்குள் ரூ.19,80,000 இழப்பீட்டை மருத்துவமனையும் பெண் மருத்துவரும் கூட்டாக வழங்க வேண்டும் என்றும், தவறினால் 6 சதவீத வட்டி விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.