அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 1 முதல் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் முன்வரிசை பேட்டிங் மோசமாக இருந்ததால், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து தொடரிலாவது அறிமுக வாய்ப்பு எளிதாகக் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் செய்தியாளர்களிடம் பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டிற்கு முழுமையாக தயாராக இருந்தாலும், மற்ற வீரர்களைப் போலவே அவரும் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கூறி இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகப் பேசிய டோஸ்கேட், மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியா உலகக்கோப்பை வெல்வதற்குக் காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் (2026) தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். வீரர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதே அணியின் முக்கிய நோக்கம் என்றும், வைபவ் சூர்யவன்ஷியின் திறமை மீது எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
