மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நடிகர் கூல் சுரேஷின் செயல் தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகப்பெரிய பேசுபொருளாகவும் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூல் சுரேஷ், கையில் முருங்கைக்காயுடன் வந்து அஞ்சலி செலுத்தியது நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் கிளப்பியது. பலரும் அவரது இந்த வினோதமான செயலைக் கடுமையாக வசைபாடி வந்தனர்.

​இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கூல் சுரேஷ் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “அடுத்தவங்க வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க” என்று விமர்சகர்களைச் சாடிய அவர், தான் பாக்யராஜ் சாரின் தீவிர சீடன் என்றும், அவரது இழப்பு தனக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் முருங்கைக்காய் விளைச்சல் மற்றும் அதன் பயன்பாடு அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தவர் பாக்யராஜ் சார் தான் என்பதை நினைவுபடுத்தவே தான் அப்படிச் செய்ததாகவும், அது தவறாக இருந்தால் அவரது குடும்பத்தினர் தன்னை மன்னித்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தன்னை வசைபாடியவர்களைப் பாக்யராஜ் சார் கண்டிப்பாகக் கண்டிப்பார் என்றும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.