ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொடூர நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார். வீட்டின் உள்ளே தூங்கிய குழந்தை, கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை குற்றவாளிகளை காவல்துறை எவ்வித தொய்வுமின்றி உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் அரசிடம் கோரியுள்ளார். இச்சம்பவத்தில் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
