மும்பை ஜுஹு கடற்கரையில், 75 வயதான முதியவர் ஒருவர் மிகக் கடுமையான வெயிலிலும் மிக்கி மௌஸ் (Mickey Mouse) வேடமிட்டு, தன் வயிற்றுப் பிழைப்புக்காகப் போராடும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களைக் கலங்க வைத்துள்ளது. ஆராதனா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் வாழ்வாதாரத்திற்காக அந்த முதியவர் படும் கஷ்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இத்தனை வயதான தமக்கு யாரும் வேலை தராத காரணத்தாலேயே, அவர் இந்த வேடமிட்டு குழந்தைகளை மகிழ்வித்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார்.
View this post on Instagram
மும்பையின் கடுமையான வெயிலிலும் அந்த கனமான மிக்கி மௌஸ் உடையை அணிந்துகொண்டு அவர் கடற்கரையில் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்; அதற்குப் பதிலாகக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அவரது பெட்டியில் போடும் பணமே அவரது அன்றாட வருமானம். அந்த ஆடைக்குள் வியர்வையில் ஒட்டுமொத்தமாக நனைந்து, கண்ணீரோடு இருக்கும் அவர், வெளியில் குழந்தைகளுக்குப் புன்னகையை மட்டுமே பரிசாகத் தருகிறார். இவருக்கு உதவியாக இவரது மனைவியும் அதே ஜுஹு கடற்கரையில் பலூன்களை விற்று வருகிறார்; இப்படி இருவருமாகச் சேர்ந்துதான் தங்களது முதிய வயதிலும் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்தத் தம்பதியினர் தளராத நம்பிக்கையுடன் நடத்தி வரும் இந்த வாழ்வாதாரப் போராட்டம், பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குவதோடு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
