கேரள மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக ‘ஆப்ரேஷன் டூஃபான்’ என்ற அதிரடியான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கேரளாவுக்குள் நுழையும் அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக் சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநில எல்லைகளைத் தாண்டி நடக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை வேரோடு ஒழிப்பதற்காக, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வீடி சதீஷன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தென் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கடத்தல் தொடர்பான உளவுத் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு கூட்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும் கேரள முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான ஒரு கூட்டு அதிரடி திட்டத்தை வகுக்க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் அவர் முன்மொழிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தலைமையில், மாநில போலீஸ் தலைமை இயக்குனர் ரவடா சந்திரசேகர் மற்றும் டாக்டிகல் கமாண்டர் புட்டா விமலாதித்யா ஆகியோர் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.