நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சியுடனும் உருக்கமாகவும் பேசியுள்ளார். தனக்கு எவ்வித அரசியல் அல்லது பணப் பின்னணியும் கிடையாது என்றும், சமையல் வேலை பார்த்துத் தன்னை கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தாயிடம் அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறியபோது, “என்னால் முடியும் வரை என் சொந்தக் காலில்தான் கடைசி வரை நிற்பேன்.
அப்படி எனக்குத் தேவை வரும்போது உன்னிடம் வருவேன்; அதுவரைக்கும் வேலைக்குப் போவேன்” என்று அவர் மறுத்துவிட்டதாகவும் தன் எளிய குடும்பச் சூழ்நிலையைப் பகிர்ந்து கொண்டார். தன் தந்தை இன்னமும் மாதம் 3,000 ரூபாய்க்கு வேலைக்குச் சென்று வருவதாகவும், தன் அண்ணன், தம்பி என அனைவரும் தங்களின் வழக்கமான வேலைகளுக்கே சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், கல்வி என்பது வெறும் பாடத்தைப் படிப்பது மட்டுமின்றி சிந்தனைத் திறனை வளர்ப்பது என்றும், அந்தச் சிந்தனை சமூக சிந்தனையாக மாறும்போது நம் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை நோக்கி ஓடினால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
12-ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவும், கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும் படித்து, பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தில் வேலை பார்த்து, அரியர் வைத்தே தன் படிப்பை முடித்த தனக்கு, சமுதாய நலன் என்ற இலக்கு இருந்ததால் இன்று முதலமைச்சர் இந்த உன்னதமான இந்து சமய அறநிலையத்துறையைத் தந்துள்ளார் எனக் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தேசத்திற்காகவும் தமிழ் மண்ணிற்காகவும் உழைக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்களை நினைத்துப் பெருமைப்படும்படி நடந்துகொள்வது மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களை வாழ்த்தினார்.
