சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவிற்கு ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, லேக் லூசெர்ன் உச்சிமாநாடு மிகவும் சாதகமான சூழலில் நடந்து முடிந்துள்ளது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ஈரான், கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பல முக்கிய விவகாரங்களில் ஆரம்பகட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான விரிவான சாலை வரைபடமும் (Roadmap) தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கண்காணிக்கவும், அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கவும் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக, ஈரானின் அணுசக்தி திட்டம், பொருளாதார தடைகளில் தளர்வு மற்றும் ஹார்முஸ் நீரிணையில் மோதல்களைத் தவிர்ப்பதற்கான நேரடி தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை உருவாக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், லெபனானில் போர்நிறுத்தத்தை நிலைநிறுத்தவும், ராணுவ மோதல்களைத் தடுக்கவும் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் மத்தியஸ்த நாடுகளை உள்ளடக்கிய ‘டி-கான்ஃப்ளிக்ட் செல்’ (De-confliction cell) என்ற புதிய குழுவும் உருவாக்கப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் முழுவதும் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம் சாத்தியமாகும் என்றும் கத்தாரும் பாகிஸ்தானும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.