பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் டக்குபதி, நந்தமூரி கல்யாண்ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் தொடக்க காட்சியை இயக்குவதற்காக 84 வயதான மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் கே.ராகவேந்திர ராவ் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும், அவருக்கு எதிரான கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

அந்த வீடியோவில், இயக்குனர் ராகவேந்திர ராவ் காட்சிக்காக நடிகர், நடிகைகளை சரியான இடத்தில் நிறுத்த முயல்கிறார். அப்போது அவர் திடீரென நடிகை கீர்த்தி சுரேஷின் கையைப் பிடித்து தன் பக்கமாக இழுக்கிறார். பின்னர், தனது முடிவை மாற்றி நடிகை கிருத்தி ஷெட்டியின் கையைப் பிடித்து இழுத்து அவருக்கு வழிகாட்டுகிறார். தொடர்ந்து, வெங்கடேஷ் மற்றும் கல்யாண்ராமிடம் காட்சிக்காக நடிகைகளின் தோள்களில் எப்படி கை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தது?” என்று இணையவாசிகள் பலரும் ராகவேந்திர ராவின் நடத்தைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அவரை கடுமையாக டிரோல் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு நடிகை நிஹாரிகா கொனிடேலா விஷயத்திலும் இவர் இப்படித்தான் நடந்துகொண்டார் என்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், அவர் ஒரு காட்சியை இயக்குவதற்காக மட்டுமே நடிகர்களுக்கு வழிகாட்டினார் என்று ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.