பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர் ஆவார். அவர் தனது காதலியான கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை மாதத்தில் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ ரசிகர்களை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஆமீர் கானின் முதல் மனைவி ரீனா தத்தா, இரண்டாவது மனைவி கிரண் ராவ், அவரது மகன் ஆசாத் மற்றும் ஆமீர் கான் திருமணம் செய்யவிருக்கும் மூன்றாவது மனைவி கௌரி ஸ்ப்ராட் ஆகிய அனைவரும் ஒரே காரில் ஒன்றாகப் பயணிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காரின் முன் இருக்கையில் ஆமீர் கான் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் அவரது இரு முன்னாள் மனைவிகளும், வருங்கால மனைவியும் ஒன்றாக அமர்ந்திருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஆமீர் கான் கடந்த 1986-ஆம் ஆண்டு ரீனா தத்தாவை முதன்முதலில் திருமணம் செய்து, 2002-இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பின்னர் கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்தார். பாலிவுட்டின் சிறந்த தம்பதியாகக் கருதப்பட்ட இவர்களும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். தற்போது கௌரி ஸ்ப்ராட்டை ஆமீர் கான் தீவிரமாகக் காதலித்து வரும் வேளையில், பல பொது நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகக் காணப்படுகின்றனர். பொதுவாக விவாகரத்துக்குப் பின் தம்பதிகள் எதிரிகளாக மாறும் சூழலில், ஆமீர் கானின் இரு முன்னாள் மனைவிகளும், அவரது வருங்கால மனைவியும் எவ்வித பாகுபாடும் இன்றி ஒரே காரில் ஒற்றுமையாகப் பயணிக்கும் இந்த விசித்திரக் காட்சியைக் கண்டு பாலிவுட் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.