மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குமார் குப்தா, தனது 21 வயது ஒரே மகனான அவிக்யான் குப்தாவுடன் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற இஸ்கான் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள காலணி வைக்கும் இடத்தில் அவர்கள் தங்களது காலணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பக்தர்களுக்குக் குளிர்ச்சி தருவதற்காக மாநகராட்சி சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த ‘மிஸ்ட் கூலர்’ (நீராவி குளிரூட்டி) இயந்திரத்தின் தண்ணீர் தொட்டியில் அவிக்யான் கை கழுவச் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரத்தில் பயங்கர மின் கசிவு ஏற்பட்டிருந்ததால், தண்ணீரில் கை வைத்த உடனே அவிக்யானை மின்சாரம் தூக்கி வீசியது.

மகனைக் காப்பாற்ற ஓடிவந்த தந்தை அமித் குப்தாவையும் மின்சாரம் தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அவிக்யானை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மகனின் உடல் மீது விழுந்து தந்தை கதறி அழுததும், மார்பை அமுக்கி ‘சிபிஆர்’ முதலுதவி கொடுத்து எழுப்ப முயன்றதும் அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் மூழ்கடித்தது.

மாநகராட்சி ஆணையர் ஜக்பிரகாஷ் உத்தரவின் பேரில், பொது மேலாளர் முகமது அன்வர் குவாஜா இந்த விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்தினார். விசாரணையில், குளிரூட்டி இயந்திரத்தைப் பராமரித்து வந்த ஒப்பந்ததாரர் சந்தீப் குமார் அகர்வாலின் அலட்சியத்தால் தான் இந்த மின் கசிவு ஏற்பட்டு, ஒரு இளம் உயிர் பறிபோயுள்ளது என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அலட்சியமாகச் செயல்பட்டு விபத்துக்குக் காரணமான ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி  காவல் நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.