திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி ஆகிய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (13) மற்றும் அவரது தம்பி லோகேஸ்வரன் (9) ஆகிய இரு சிறுவர்களும் இன்று அங்குள்ள ஒரு குளத்தின் அருகே விளையாடச் சென்றுள்ளனர்.

​விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் இருந்த வாத்தைப் பிடிப்பதற்காக இரு சிறுவர்களும் ஆசையோடு குளத்தில் இறங்கியதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாகக் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கி அலறியுள்ளனர். சிறுவர்கள் நீரில் மூழ்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அம்பிள்ளைக்கை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.