இந்தியாவில் இருமல் மருந்து உள்ளிட்ட அனைத்து வகையான திரவ வடிவ மருந்துகளையும் இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்களில் வாங்க முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்காக ‘மருந்துகள் விதிமுறை 1945’-ல் திருத்தம் செய்யப்பட்டு, ‘டிரக்ஸ் விதிகள், 2026’ என்ற புதிய விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. முன்னதாக மருந்துகள் சட்டத்தின் ‘பட்டியல் K’ பிரிவின் கீழ் சிரப் வகை மருந்துகளை மருத்துவர் சீட்டு இல்லாமலேயே நேரடியாக கடைகளில் வாங்குவதற்கு இருந்த விதிவிலக்கு, இந்த புதிய திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீப காலங்களில் அசுத்தமான இருமல் மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் குழந்தைகளின் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால் இனி பெனட்ரில் கிரிலின்க்டஸ் சோவ்சில்ஸ் போன்ற சாதாரண இருமல் மற்றும் சளிக்கான சிரப் மருந்துகளை வாங்குவதற்கும் தகுதியான மருத்துவரின் பரிந்துரை அவசியமாகிறது. திரவ மருந்துகளின் உற்பத்தியை தீவிரமாகக் கண்காணிக்கவும், மருந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த புதிய நடைமுறை பெரிதும் உதவும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.