பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது மத்திய ஒப்பந்த முறையில் உலக கிரிக்கெட்டையே வியப்பில் ஆழ்த்தும் வகையிலான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. லாகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிபி தலைவர் மோசின் நக்வி, கிரிக்கெட் வீரர்களுக்கான பாரம்பரிய ஏ, பி, சி, டி (A, B, C, D) கிரேடு முறைகள் இனி முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, மனிதர்களின் தலையீடு இல்லாமல் 85 சதவீத முடிவுகளைத் தரவுகள் மற்றும் கணினியின் புள்ளிவிவரங்களே (Data & Analytics) தீர்மானிக்கும் புதிய வெளிப்படையான தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களின் ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை நிலவி வந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

​இந்தப் புதிய விதிகளின்படி, வீரர்கள் விளையாடும் போட்டி வடிவங்களின் (Formats) அடிப்படையில் அவர்கள் நான்கு தனித்தனி டிராக்குகளாகப் பிரிக்கப்படவுள்ளனர். டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படும் இந்த டிராக்குகளில், டெஸ்ட் வீரர்களுக்கு அதிக நிதியுதவி வழங்கப்படவுள்ளதோடு, டி20 வீரர்களுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அதிக சுதந்திரம் அளிக்கப்படவுள்ளது.

இனி வெறும் 50 அல்லது 100 ரன்கள் எடுப்பதை மட்டும் பார்க்காமல், அணியின் வெற்றிக்கான வீரர்களின் ‘இம்பேக்ட்’ மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும், மத்திய ஒப்பந்தத்தைப் பெற அனைத்து வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களான ஆசிப் ஜாவேத் மற்றும் மைக் ஹெஸன் ஆகியோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.