நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், “ஒரு புதிய வீட்டிற்குச் சென்றால் அங்குள்ள தெரு நாய்கள் நம்மைப் பார்த்துக் கத்தும், சில நாய்கள் பிஸ்கட் சாப்பிடாமல் பிரியாணிதான் சாப்பிடும், அதேபோல்தான் நாட்டை நம்பிக் கொடுத்திருக்கும் போது அவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று மக்களைத் தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய விவகாரம் தற்பொழுது கோலிவுட்டிலும் சோசியல் மீடியா ஏரியாக்களிலும் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீயாய் பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
வாக்காளர்களின் உணர்வுகளைக் கேவலப்படுத்தும் வகையில் அமைந்த லாரன்ஸின் இந்தத் தத்துவப் பேச்சை இயக்குநர் சேரன் வன்மையாகக் கண்டித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான போஸ்ட் ஒன்றைப் போட்டுள்ளார்.
அதில், மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் இருந்தே உங்களது அரசியல் பயணம் எதை நோக்கிச் செல்கிறது என்பது புரிந்துவிட்டது என்றும், இதுவரை உங்களிடம் இருப்பதாகக் கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் சாடியுள்ள சேரன், “இப்படிக்கு.. பிஸ்கட்டும் பிரியாணிக்காகக் கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்” எனத் தனது ஆதங்கத்தை நெத்தியடியாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாகிப் பெரிதாவதை உணர்ந்த ராகவா லாரன்ஸ் தற்பொழுது அதற்கு அவசர விளக்கம் அளித்துள்ளார். தான் ஒரு புதிய சூழலைப் புரிந்துகொள்வதற்கு நேரம் தேவைப்படும் என்பதை விளக்கத்தான் அப்படிப் பேசினேனே தவிர, மக்களைக் குறித்து அவ்வாறு தவறாகக் குறிப்பிடவில்லை என்றும், தயவுசெய்து முழு வீடியோவையும் பார்த்துத் தான் சொல்ல வந்த உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
