பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள 2025-26 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் வறுமை மிக அதிவேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானில் வாழும் ஒவ்வொரு 10 நபர்களில் 3 பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 21.9% ஆக இருந்த அந்நாட்டின் வறுமை விகிதம், 2024-25 ஆம் ஆண்டில் 28.9% ஆக உயர்ந்து லட்சக்கணக்கான மக்களை மீண்டும் வறுமைக்குள் தள்ளியுள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் இந்த பாதிப்பு தீவிரமடைந்துள்ளதுடன், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வருமான சமத்துவமின்மை போன்றவையே இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மறுபுறம், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வித்துறையிலும் பாகிஸ்தான் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்நாட்டின் கல்விக்கான அரசு நிதி ஒதுக்கீடு 23% வரை குறைந்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8% ஆக மட்டுமே உள்ளது.

இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாகும். இதனால் ஏழை எளிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருவதுடன், லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக் கல்வியை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் இந்த வறுமைப் பிடியில் இருந்து மீண்டு, மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமானால், கல்வித்துறையில் முதலீடுகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று அந்த அரசு அறிக்கை எச்சரித்துள்ளது.