திமுக சந்தித்த தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாமல், தூத்துக்குடியில் இருந்து சென்னை அறிவாலயத்திற்கு வந்த பெண் நிர்வாகி ஒருவர், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துக் கண்ணீர் விட்டு அழுதார். இந்த உருக்கமான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், கழகத்தின் தோல்வியை ஏற்க முடியாமல் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து, தலைவரின் முகம் கண்டு ஆறுதல் அடையும் உடன்பிறப்புகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அறிவாலய வாசலில் குவிகிறார்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கழகத்தின் தோல்வியை, குறிப்பாக தங்களின் வெற்றி பறிக்கப்பட்டதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் மறுகி, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து சென்னைக்கு வந்து, தங்களின் முகம் கண்டு ஆறுதல் அடைந்து, இப்படி உணர்ச்சி வெள்ளத்தில் தங்களை ஆழ்த்திக்கொள்ளும் உடன்பிறப்புகள் தான்… https://t.co/IONsOMwPCq
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) June 13, 2026
மேலும், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சலிக்காமல் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதையும், தாயின் பரிவையும் தலைவனின் தன்னம்பிக்கையையும் சேர்த்துத் தருவதையும் தான் பார்த்ததாக அவர் பாராட்டியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றபடி ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசி, புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கும் தலைவரின் பண்பை பொதுச்செயலாளரே வியந்து சொன்னதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிரிகள் வெட்ட வெட்ட வளரும் இந்த கழகத்தின் ஓர்மையை தங்களின் வழியாகக் காண்கிறோம் என்று தனது எக்ஸ் தளப் பதிவில் பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.
