தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக-வின் மாபெரும் ஆட்சி மாற்றத்தால் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்பொழுது ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் ரகசியமாக ஒன்று சேர்ந்து தவெக அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து வருவதாகப் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மிகக் கடுமையான அரசியல் குண்டைப் தூக்கிப் போட்டிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாஜக நிர்வாகி விஜயதரணி, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன் மற்றும் பல முக்கிய மாற்றுக் கட்சித் தலைவர்கள் தவெக-வில் இணையும் மாபெரும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உதவிகளைப் பெற்றுக்கொண்டு தூக்கி எறிவதே கருணாநிதி குடும்பத்தின் வரலாறு என்றும், தற்போதைய தேர்தலில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் மட்டும் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் திமுக 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது என்றும் ஸ்டாலின் குடும்பத்தின் பண்ணையார்தனத்தால் தான் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது என்றும் சாடினார்.
மேலும், தேர்தல் முடிவுக்குப் பின் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ரகசியமாகப் பேசி, இவரா அவரா எனச் சூழ்ச்சி செய்ததாகவும், இதனால்தான் தவெக தான் எதிர்காலம் என உணர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நம்மோடு இணைந்து வருகிறார்கள் என்றும் விளக்கமளித்தார்.
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரைப் பழனிசாமி விலை கொடுத்து வாங்கியதாகக் குற்றம் சாட்டிய அவர், எடப்பாடியின் அறிக்கைகள் அனைத்தும் அறிவாலயத்தில் தான் அச்சிடப்படுவதாகவும், இவர்களின் இந்த ரகசியக் கூட்டணிக்குப் பின்னால் பாஜகவின் ஆதரவு இருப்பதாகவும் அதிரடி புகார்களை அடுக்கினார்.
“நாங்கள் இருவரும் கூட்டணி வைக்க மாட்டோம்” என ஸ்டாலினும் பழனிசாமியும் செய்தியாளர்கள் முன்னிலையில் திறந்த மனதோடு சொல்லத் தயாரா? எனச் சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா, இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் கூட வரும் இடைத்தேர்தலில் ஒரு பூத்தில் கூட முன்னிலை பெற முடியாது என்றும், அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தவெக அரசுதான் 60 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டை ஆளும் என்றும் சவால் விடுத்துப் பேசியுள்ள இந்த அதிரடிப் பேச்சு தற்பொழுது சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
