இத்தாலியின் சார்டினியா தீவில் உள்ள புகழ்பெற்ற புன்டா மொலென்டெஸ் கடற்கரையில், சுற்றுலாப் பயணிகள் குடைகள், கூடாரங்கள் மற்றும் நிழல் தரும் எந்தப் பொருட்களையும் பயன்படுத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் போது, கடற்கரையில் இருந்த குடைகள் மற்றும் கூடாரங்கள் மீட்புப் பணிகளுக்குப் பெரும் இடையூறாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 5 முதல் அக்டோபர் இறுதி வரை கடற்கரைக்கு வருபவர்கள் 10 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான தடையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். வெயிலிலிருந்து பாதுகாப்பு மற்றும் தோல் புற்றுநோய் தடுப்பு மிக முக்கியம் என்று கருதும் பலரும், இந்தக் கோடையில் குடை இல்லாமல் கடற்கரையில் நேரத்தைக் கழிப்பது மிகவும் கடினம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இத்தாலியின் மற்ற கடற்கரைகளில் அதிக கட்டணம் செலுத்தி நாற்காலி மற்றும் குடை வசதியைப் பெறும் கலாச்சாரம் இருந்தாலும், புன்டா மொலென்டெஸ் கடற்கரையில் மக்கள் தங்கள் சொந்த குடைகளை அமைக்கவும் கூடாரங்களை உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் நிர்வாகத்தின் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
