ஓமன் கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக, ஓமன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை ஏவி அமெரிக்க ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் தங்களது முற்றுகையை மீறி வரும் எந்தவொரு கப்பலாக இருந்தாலும் தாக்குவோம் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், நேற்றைய தாக்குதலின் போது அந்தக் கப்பலின் எஞ்சின் அறையைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. அந்த வணிகக் கப்பல் ஈரானில் இருந்து ஓமன் வளைகுடா வழியாகப் சட்டவிரோதமாக எண்ணெய் எடுத்துச் செல்ல முயன்றதாக அமெரிக்கா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமையும் ஒரு கப்பலையும் செவ்வாய்க்கிழமை ஒரு கப்பலையும் அமெரிக்க ராணுவம் ஏவுகணை வீசித் தாக்கியிருந்தது. இந்தத் தொடர் தாக்குதல்களின் போது கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், 3 மாலுமிகள் பரிதாபமாகப் பலியாகினர். ஓமன் கடல் பகுதியில் சர்வதேச விதிகளை மீறி வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், புதுடெல்லியில் உள்ள அமெரிக்காவின் இந்தியப் பொறுப்பு தூதர் ஜேசன் மீக்ஸை, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்கப் பிரிவு கூடுதல் செயலாளர் இன்று இரண்டாவது முறையாக நேரில் வரவழைத்துத் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், இந்தச் சம்பவங்கள் குறித்து உரிய விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
