பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், தான் அரசியலுக்கு வருவதற்கான சூழல், அதற்கு அவரது தாய் முதலில் மறுப்பு தெரிவித்துவிட்டுப் பின்னர் சம்மதம் தந்தது, மற்றும் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரின் அரசியல் என்ட்ரி குறித்தான பல சுவாரசியமான பின்னணிகளை அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியதன் விரிவான விவரம் பின்வருமாறு, கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே!
வீடியோவின் துவக்கத்தில் கீதையின் வாசகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ராகவா லாரன்ஸ், “‘கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே’ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ‘நாம் வேலை செய்கிறோம், அதற்கான பலனை எதிர்பார்க்கக் கூடாதா?’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கு ஒரு குட்டி கதை மூலம் விளக்கம் அளிக்கிறேன்” என்று கூறி ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார்.

“ஒரு பெரிய பணக்காரரின் வீட்டில் அறையைச் சுத்தம் செய்ய இரண்டு பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் எப்போதுமே தன்பாட்டில் வேலை செய்துகொண்டே இருப்பார். மற்றொருவரோ, வேலை செய்வதை விட பணக்கார முதலாளியிடம் சென்று, ‘சார் நீங்க சூப்பரா இருக்கீங்க’ என எப்போதும் ஜால்ரா தட்டிக்கொண்டே இருப்பார்.

ஒருநாள் முதலாளி வெளியூருக்குச் செல்லும் முன்பாக இருவரையும் அழைத்தார். தன்னை எப்போதும் பாராட்டிப் பேசிய வேலைக்காரருக்குச் சிறிய சம்பள உயர்வை மட்டும் கொடுத்தார். ஆனால், சத்தமில்லாமல் உழைத்த மற்றொரு வேலைக்காரரை அழைத்து, ஒரு வீட்டைப் பரிசாகக் கொடுத்து, ‘என்னுடன் வெளியூருக்கு வந்துவிடு’ என்றார்.

அதிர்ச்சியடைந்த முதல் வேலைக்காரர், ‘சார், நான் தானே உங்களை தினமும் பாராட்டினேன்?’ எனக் கேட்டதற்கு, ‘நான் கொடுத்த வேலையை நீ சரியாகச் செய்யவில்லை, ஜால்ரா தான் அடித்தாய்’ என முதலாளி கூறினார். எனவே, நாம் உண்மையாக வேலை செய்தால் அதற்கான பலனை கடவுள் நிச்சயம் கொடுப்பார்” என்று லாரன்ஸ் குறிப்பிட்டார்.

“நான் திருச்சி கிழக்கில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றால், நான் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்ட லாரன்ஸ், தனது சமூக சேவைப் பயணமே தன்னை அரசியலை நோக்கித் தள்ளியது என்றார். “நான் தொடர்ந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து வந்தேன். அப்போது தான் ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தது. அங்குப் போராட்டக் களத்திற்குச் சென்று மாணவர்களுக்குச் சாப்பாடு கொடுத்தேன். அதுவே எனது அரசியல் பயணத்திற்கான துவக்கமாக அமைந்தது” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காலகட்டம் குறித்து லாரன்ஸ் பேசுகையில், “ரஜினி குறித்து சீமான் நிறைய விமர்சனங்களை முன்வைத்தார். நான் ரஜினியிடம் நேரடியாகச் சென்று, ‘அண்ணே… அவர் ரொம்ப ஓவரா பேசுறார்’ எனக் கூறினேன். ஆனால், ரஜினியோ என்னை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.

அதன் பிறகு, ரஜினி தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நானும் அரசியலுக்கு வருவதாக ரஜினியிடம் கூறினேன். என் தம்பிகளும் ‘நாம் அரசியலில் வென்றால் பெரிய அளவில் அறக்கட்டளை கட்டி மக்களுக்கு உதவலாம்’ எனக் கூறினார்கள்.”

தொடர்ந்து பேசிய லாரன்ஸ், தனது அரசியல் ஆசைக்கு அவரது அம்மா முட்டுக்கட்டையாக இருந்ததை விவரித்தார்: என்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து என் அம்மாவிடம் சொன்னேன். அதைக்கேட்டதும் அவர் முகம் சட்டென மாறிவிட்டது. எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டார். அடுத்த 2, 3 நாட்களுக்கு என்னிடம் பேசவே மறுத்துவிட்டார். நான் அரசியலுக்கு வருவதை என் அம்மா துளியும் விரும்பவில்லை. ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று அம்மா எச்சரித்தார். ‘ரஜினியை நேரில் சந்தித்து இதைச் சொல்லப் போகிறேன்’ என்றும் கூறினார்.

அந்தச் சமயத்தில் தான் எதிர்பாராதவிதமாகக் கொரோனா பேரிடர் வந்து எல்லாமே முடங்கியது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ‘நான் அரசியலுக்கு வரவில்லை’ என ரஜினி அறிவித்தார். அவ்வளவு தான், நாங்கள் தலைமேல் கை வைத்து உட்கார்ந்துவிட்டோம். நான் ரஜினியைப் போய்ப் பார்த்தபோது, ‘மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே’ என அவர் மிகவும் வருத்தப்பட்டார்” என்றார்.

ரஜினியின் அரசியல் பின்வாங்கலுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், அதன் பிறகு, நண்பர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். உடனே நான் எனது ட்ரஸ்ட்டிற்குச் சென்று, ‘நண்பர் விஜய் வருகிறார்’ எனக் கூறி, அவருக்கான பணிகளைத் துரிதமாக ஆரம்பித்தேன். விஜய் மிகக் கடின உழைப்பாளி. இதுகுறித்தும் என் அம்மாவிடம் கேட்டேன். ஆனால் அம்மா அப்போதும், ‘விஜயிடம் வேண்டாம் என்று சொல்லிவிடு’ எனக் கூறினார்.

ஆனால், அதன் பிறகு நடந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே என் அம்மா, ‘விஜய் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்’ எனக் கூறினார். அதன் பிறகே, என்னை அரசியலுக்குள் நுழைய அம்மா அனுமதி கொடுத்தார். ஒருவழியாக இப்போது அம்மா ‘ஓகே’ சொல்லிவிட்டார்” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் எனக்கு எழுத படிக்க தெரியாது. என்னுடன் இருந்த பசங்க எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லை என்றால் கல்வித்துறை அமைச்சர் ஆகுங்கள்  நிறைய பேருக்கு மருத்துவ உதவி செய்யலாம் நிறைய பேரை படிக்க வைக்கலாம் என்றனர் ஆனால் நான் எழுத படிக்க தெரியாதவன் என்பதால் படித்தவர்கள் வரவேண்டிய துறை எல்லாம் எனக்கு செட் ஆகாது முதலில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யணும் பதவிக்கு ஆசைப்படக்கூடாது என்று கூறியதாக தெரிவித்தார்.

வீடியோவின் நிறைவாக, தனக்கு உயிராக இருக்கும் ரசிகர்களிடம் உருக்கமான கேள்வி ஒன்றை லாரன்ஸ் முன்வைத்துள்ளார். “என் பெற்ற தாய்க்கு நிகராக என் ரசிகர்களை நான் நினைக்கிறேன். இப்போது என் அம்மா சம்மதித்துவிட்டார். மக்களாகிய நீங்கள் சொல்லுங்கள்… நான் அரசியலுக்கு வரலாமா? அந்தத் தகுதி எனக்கு இருக்கிறதா? என்பது குறித்து நீங்கள் அனைவரும் கமெண்ட்ஸில் சொல்லுங்கள்” என ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த திடீர் வீடியோ பதிவு, அவர் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.