இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நாட்டுச் சிறுவன் ஒருவன் இந்தியப் பணமான 10 ரூபாய்க்காக “பாரத் மாதா கீ ஜே” என்று முழக்கமிட்ட நெகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முள்வேலிக்கு அந்தப்பக்கம் பாகிஸ்தான் எல்லையில் குதிரைகளுக்காகப் புல் செதுக்கிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களைத் தனது மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு சிறுவனை வேலியின் அருகே அழைத்த அந்த வாலிபர், “இந்தியப் பணமான 10 ரூபாய் தருகிறேன், பாரத் மாதா கீ ஜே என்று சொல்” எனக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல், எல்லைப் பிரச்சனைகள் எதையும் அறியாத அந்தப் பாகிஸ்தான் சிறுவன், 10 ரூபாய்க்காகத் தூய்மையான புன்னகையோடு “பாரத் மாதா கீ ஜே” என மழலை மாறாமல் முழக்கமிட்டான்.
“இந்த 10 ரூபாயை வச்சு என்ன செய்வ?” என வாலிபர் கேட்க, “விளையாடுவேன்” எனச் சிறுவன் பதிலளித்துள்ளான். அதுமட்டுமின்றி, வாலிபரிடம் புத்திசாலித்தனமாக 20 ரூபாய் கேட்டு அந்தச் சிறுவன் கையை நீட்டிய கியூட்டான வீடியோ, “குழந்தைகளுக்கு எல்லைகள் கிடையாது” என்ற கேப்ஷனுடன் இணையத்தில் பலரது இதயங்களையும் வென்று வருகிறது.
