தானே பகுதியில் தெரு நாய் ஒன்று, பிறந்த சில நாட்களேயான ஒரு ஆண் குழந்தையின் உடலைத் தன் வாயில் கவ்விக்கொண்டு ஓடிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அருகில், நாய் ஒன்று ஏதோ ஒரு பொருளைக் கவ்விக்கொண்டு செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள், கூர்ந்து கவனித்தபோதுதான் அது ஒரு பிஞ்சு குழந்தையின் உடல் என்பதை அறிந்து உறைந்து போயினர்.
மேலும் அதற்குள் அந்த நாய், குழந்தையின் ஒரு காலைக் கடித்துக் குதறியிருந்தது. இந்த கொடூரமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதக் கருகலைப்பு காரணமாக இந்தக் குழந்தை வீசப்பட்டதா அல்லது யாரேனும் பெற்றோர் குழந்தையைக் கொன்று அங்கே வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீஸார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
