தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “இது மின்வெட்டா அல்லது மின்திருட்டா?” எனத் தமிழக அரசை நோக்கிக் காரசாரமான கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் உற்பத்தி குறைவா, நிர்வாகத் தோல்வியா அல்லது மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காகத்திருப்பிவிடப்படுகிறதா என்று அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இருளில் தவிப்பது ஏழை மக்களின் வீடுகள் என்றும், ஆனால் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருப்பது பெரும் தொழில் வளாகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் என்கிற காட்சியே மக்கள் மத்தியில் இந்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவுகளில் குழந்தைகள் தூங்க முடியாமல் தவிப்பதையும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மூச்சுத் திணறலோடு இரவைக் கழிப்பதையும் தனது அறிக்கையில் வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஒளியில் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் கனவுகள் இருளில் கரைவதாகவும், சிறுதொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
எனவே, முன்அறிவிப்பின்றி நடைபெறும் மின்வெட்டுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதோடு, மாவட்ட வாரியான மின்சார உற்பத்தி மற்றும் விநியோக விபரங்களைத் தமிழக அரசு வெளிப்படையாகப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் கள்ள மௌனம் காக்காமல் அரசு வெளிப்படையான நிரந்தரத் தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
