மும்பை டி20 லீக் கிரிக்கெட் தொடரில், பந்த்ரா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஆர்க்ஸ் அந்தேரி அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ஆல்-ரவுண்டராக மிரட்டி, ஆர்க்ஸ் அந்தேரி அணிக்கு அதிரடி வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த பந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணி, ஆர்க்ஸ் அந்தேரி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. குறிப்பாக, அர்ஜுன் டெண்டுல்கர் தனது 3 ஓவர் ஸ்பெல்லில் ஒரு மெய்டன் ஓவர் உட்பட வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் பந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்க்ஸ் அந்தேரி அணியின் தொடக்க வீரர் திவ்யான்ஷ் (26 ரன்கள்) சீக்கிரமே ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் ஷிவம் துபேவின் அதிரடி முடிவால் பேட்டிங் வரிசையில் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டார் அர்ஜுன் டெண்டுல்கர். மைதானத்திற்குள் நுழைந்தது முதலே 194 ஸ்டிரைக் ரேட்டில் ருத்ரதாண்டவம் ஆடிய அர்ஜுன், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.

வெறும் 34 பந்துகளில் 5 அசுரத்தனமான சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு ஜோடியாக ஆடிய இளம் வீரர் முஷீர் கான் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சிறப்பான ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி பிரிக்கப்படாத 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்து, அணியை 13.5 ஓவர்களிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தது.