இந்தியப் பங்குச்சந்தையின் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிதி மோசடிப் புகார் தங்கம் ஏற்றுமதித் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு பிரபல எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது எழுந்துள்ளது.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 15.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குத் தனது வருமானத்தைப் பொய்யாகக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
#NewsUptate | ரூ.15.15 லட்சம் கோடிக்கு மேல், இல்லாத வருவாயை இருப்பதாக காட்டிய புகாரில் சிக்கிய RAJESH EXPORTS நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்த LIC. #SunNews | #LIC | #RAJESHEXPORTS pic.twitter.com/SmSRT3Q4ee
— Sun News (@sunnewstamil) June 8, 2026
“>
சுவிட்சர்லாந்தில் உள்ள தங்களின் கிளை நிறுவனம் வாடிக்கையாளர்களின் தங்கத்தைச் சுத்திகரித்துக் கொடுக்கும் கூலி வேலையை மட்டுமே செய்த நிலையில், அந்தத் தங்கத்தின் மொத்த மதிப்பைத் தங்களின் சொந்த வருமானமாக இந்த நிறுவனம் கணக்கு காட்டியுள்ளது.
மேலும், புரோக்கரேஜ் நிறுவனம் ஒன்றுடன் வர்த்தகம் செய்யாமலேயே பல ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்றதாகப் பொய்க் கணக்கு காட்டியதும், கம்பெனிப் பணம் 338.90 கோடி ரூபாயைத் தலைவரின் தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியதும் செபியின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையில் 2025 நிதியாண்டில் 4.23 லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்ததாகக் காட்டப்பட்டிருந்தாலும், அதன் நிகர லாபம் வெறும் 95 கோடி ரூபாய் மட்டுமே என விசித்திரமான முரண்பாடுகள் இருந்ததே இந்தச் சந்தேகத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதுகுறித்து செபி தணிக்கை செய்ய முயன்றபோது, தங்களின் கணினி அமைப்புகளை ஆய்வு செய்ய இந்த நிறுவனம் அனுமதி மறுத்து முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஆனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளதுடன், செபி அதிகாரிகள் தங்களின் வருவாயையும் லாபத்தையும் குழப்பிக் கொண்டு தவறான புகாரை வாசிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த மெகா கார்ப்பரேட் விவகாரத்தால் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
