சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தவெக நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவகங்கையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ளார். பின்னர், நேற்று இரவு சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்துவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அவருடன் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தங்களது பையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து, கார்த்திகேயனைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்த சிவகங்கை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

மேலும் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கொலை நடந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்துப் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.