சீனாவின் சூதாட்ட விடுதிகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், கேசினோ ஒன்றில் தொடர்ந்து அசாத்தியமான வெற்றிகளைப் பெற்று வந்த பெண் ஒருவரின் மீது சக வீரர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அவர் அழுத்தம் நிறைந்த சூழலிலும் மிகத் துல்லியமாக எதிராளியின் காய்களைக் கணிப்பதையும், அடிக்கடி கண்களை சிமிட்டுவதையும் கவனித்த வீரர்கள், கேசினோ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள் விரைந்து வந்து சோதித்தபோது, அந்தப் பெண் சுமார் 400 டாலர் மதிப்பில் ஆன்லைனில் வாங்கப்பட்ட சிறப்பு ‘இன்ஃப்ராரெட் கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லென்ஸ் மூலமாக, கண்ணுக்குத் தெரியாத சிறப்பு மையினால் (Invisible Ink) குறியிடப்பட்ட மஹஜோங் மற்றும் சீட்டுகளின் எண்களை அவரால் எளிதாகப் பார்க்க முடிந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இதுபோன்ற தொழில்நுட்ப மோசடிகள் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த ஜனவரி 2026-லும் ஹுனான் மாகாணத்தில் இதே பாணியில் ஏமாற்றிய நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர். கேசினோக்களில் ஏஐ (AI) கேமராக்கள் மற்றும் அதிநவீன கண்காணிப்பு மென்பொருள்கள் இருந்தாலும், சக மனிதர்களின் ‘சந்தேகக் கண்’ மற்றும் உள்ளுணர்வு மூலமே இந்த மோசடி முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீன சட்டப்படி சூதாட்ட விடுதிகளில் கேட்ஜெட்களைப் பயன்படுத்தி ஏமாற்றுவது கடுமையான குற்றவியல் மோசடியாக கருதப்படுவதால், அந்தப் பெண் தற்போது சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இதேபோல சீன தயாரிப்பு லென்ஸ்களைப் பயன்படுத்தி பிரான்சில் 90,000 பவுண்டுகள் ஏமாற்றிய நபருக்கு ஏற்கனவே 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஹை-டெக் திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கேசினோக்கள் தற்போது இன்ஃப்ராரெட் தடுப்பு அட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.