“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க.  எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் தீயாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘முறையான அழைப்பு வந்ததால், குழந்தை பிறந்து 10 நாட்களேயான நிலையிலும் மருத்துவர்களின் அறிவுரையை மீறி இந்த கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன்; ஆனால், மேயர் பிரியா வேண்டுமென்றே கவுன்சிலர்களை முன்னிறுத்தி, குத்துவிளக்கு ஏற்றும் போது எனக்கு மெழுகுவர்த்தியைத் தராமல் ஐஏஎஸ் அதிகாரிடம் கொடுத்து என்னை அவமானப்படுத்திவிட்டார்’ என எம்.எல்.ஏ பல்லவி கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அவமதிப்பைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். ஆனால், இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள மேயர் பிரியா, ‘அரசு புரோட்டோகால் (Protocol) படி மேயருக்கு அடுத்தபடியாக ஐஏஎஸ் அதிகாரிதான் விளக்கேற்ற வேண்டும், அதற்குப் பிறகுதான் எம்.எல்.ஏ; அந்த மரபு அவருக்குத் தெரியவில்லை. நாங்கள் அவரைப் புறக்கணிக்கவில்லை, அவர் தாமதமாக வந்தாலும் அவருக்காகக் காத்திருந்துதான் நிகழ்ச்சியைத் தொடங்கினோம்; வேண்டுமென்றே பிரச்சினை செய்பவர்களை என்ன செய்ய முடியும்?’ என அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

‘இருப்பினும் இதை நான் அவமானமாகக் கருதவில்லை, மக்கள் நலனே முக்கியம்’ என எம்.எல்.ஏ பல்லவி கூறியுள்ள போதிலும், திமுக மற்றும் தவெக இடையேயான இந்த நேரடி மோதல் போக்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.”