மும்பையில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மே 31-ஆம் தேதி கொங்கண் ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பெட்டிகளுக்குள் நுழைந்து ஒரு நபர் அத்துமீறி பழங்களை விற்றுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவரிடமிருந்த பழங்களைச் சோதித்தபோது, அவை அனைத்தும் தரம் குறைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
மேலும், அவரிடம் விசாரித்ததில் ரயிலில் வியாபாரம் செய்வதற்கான எந்தவொரு முறையான அனுமதியோ அல்லது அடையாள அட்டையோ இல்லை என்பதும் அம்பலமானது. இதனையடுத்து, ரயில்வே விதிகளின்படி அவருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதுடன், மேல் நடவடிக்கைக்காக ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
ரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பான, தூய்மையான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக கொங்கண் ரயில்வே மே 31 முதல் 15 நாட்களுக்கு ஒரு சிறப்பு கூட்டுச் சோதனையைத் தொடங்கியுள்ளது. அதன்படி ஓடும் ரயில்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் அனுமதி இல்லாத வியாபாரம், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பது போன்ற அத்துமீறல்களைத் தடுப்பதே இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும். பயணிகள் யாரும் போலி வியாபாரிகளிடம் ஏமாற வேண்டாம் என்றும், ரயில்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கோ அல்லது ஆர்.பி.எஃப்-விற்கோ தகவல் தெரிவிக்குமாறும் கொங்கண் ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
