ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டுச் சென்ற பெண் ஒருவரைக் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு அவரின் தங்க நகைகளையும் பறித்துச் சென்ற வழக்கில் 8 காமப்பேய்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்குக் கிரிவலம் வந்த அந்த பெண், கிரிவலப் பாதையை முடித்துவிட்டுச் சென்றபோது மர்ம நபர்கள் சிலரால் வற்புறுத்திக் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வைத்து அந்த கும்பல் அந்த பெண்ணுக்குக் கடுமையான பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடம் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியது. ​பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மாவட்ட எஸ்பி உத்தரவின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இன்னும் 3 குற்றவாளிகளைப் பிடிக்கக் காட்டுப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ள இந்த பயங்கர சம்பவம் பெண் பக்தர்களிடையே மிகப்பெரிய அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.