தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரே இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று அதிகாலை நேர்ந்த படுபயங்கர விபத்து  திரையுலகை உலுக்கி எடுத்துள்ளது.

சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் விறுவிறுப்பான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சி காக சிலிண்டரில் வாயு நிரப்பப்பட்ட போது, எதிர்பாராத விதமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி மதுரவாயலைச் சேர்ந்த மதன் என்ற 26 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மற்ற 5 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகள் கழித்து எஸ்.ஜே.சூர்யா மீண்டும் த்ரில்லர் படத்தை இயக்கி வரும் சூழலில், அதிகாலையில் நடந்த இந்த ரத்தக் களறி விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர்.