“சட்டமன்றத்தில் மயக்கம், திருச்சியில் துள்ளலா? இந்த ஸ்கிரிப்ட்டை எழுதிக் கொடுத்தது யார்?” என்று முதலமைச்சர் விஜய்யின் மேடைப் பேச்சை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் சமீபத்திய திருச்சி உரையையும், அவரது சட்டமன்ற செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பல அதிரடி கேள்விகளை எழுப்பியதுடன், விஜய்யை ‘விஜய் ப்ரோ’ எனக் குறிப்பிட்டுச் சாடியுள்ளார்.

​செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “சட்டப்பேரவையில் சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை என இருந்த முதலமைச்சர் விஜய், திருச்சியில் மட்டும் எள்ளலும் துள்ளலுமாகப் பேசுகிறார். அங்கே அவர் கர்ஜிப்பதாக நினைத்து, கத்திப் பேசியுள்ளார். ஏன் இந்த திடீர் வீர வசனம்? சட்டமன்ற உரையையும், திருச்சி உரையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் தந்திரம், அசிங்கம், புலம்பல் எல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தான் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு விஜய் ப்ரோ வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்” எனப் பொங்கித் தீர்த்துள்ளார்.