அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும் என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அக்கட்சியின் தீவிரத் தொண்டர் பூக்கடை மகேந்திரனுக்கு மதுரை மாநகர அதிமுக சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர செயலாளருமான செல்லூர் கே.ராஜு தலைமை தாங்கி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்ர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “கட்சியின் ஒற்றுமைக்காகவும், அதன் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் தொண்டர் மகேந்திரன் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார். அவரது இந்த முடிவு, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் தற்போதைய மன உணர்வை வெளிக்காட்டுகிறது. தற்போது அதிமுக மிகப்பெரிய சோதனையையும் பாதிப்பையும் சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்குக் காரணமானவர்கள், தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு, தவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “மகேந்திரனின் மரணமே அதிமுகவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், இதயதெய்வம் ஜெயலலிதாவும் தங்களை விமர்சித்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், தாயுள்ளத்தோடு அனைவரையும் கட்சியில் அரவணைத்துச் சென்றனர். அதேபோல, தற்போதைய அதிமுக தலைவர்களும் தொண்டர்களுக்கு மதிப்பளித்து, தாயுள்ளத்தோடு செயல்பட வேண்டும். ஜெயலலிதா இந்தியாவின் 3-வது பெரிய இயக்கமாக மாற்றிக் காட்டிய அதிமுகவை, மீண்டும் எழுச்சி பெறச் செய்ய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் வீறு கொண்டு எழ வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.