தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகை த்ரிஷா, 40 வயதில் தன்னை 25 வயதுப் பெண் போலக் காட்டிக்கொள்ளத் தனக்கு விருப்பமில்லை என்றும், 40 வயதிலும் சாதிக்க முடியும் என்பதை இளம்பெண்களுக்கு உணர்த்துவதே தனது நோக்கம் என்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள எதார்த்தமான பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் படுவேகமாகப் பரவி வருகிறது.
கடந்த மே 4-ஆம் தேதி தனது 43-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய த்ரிஷாவிற்கு, இந்த மே மாதம் அடுத்தடுத்த பல சுவாரஸ்யமான வெற்றிகளுடன் கோலாகலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அவரது பிறந்தநாள் அன்றே வெளியான தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தவெக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முன்னிலை வகித்த போது, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு நேரடியாகச் சென்று த்ரிஷா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மே 14-ஆம் தேதி வெளியான அவரது ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படி அடுத்தடுத்த வெற்றிகளின் கொண்டாட்டத்தில் இருக்கும் த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மேஜிக்கல் மே மாதத்தில் இன்னும் சில விஷயங்கள் காத்திருக்கின்றன; இன்னும் நீண்ட காலத்திற்கு நான் புன்னகையுடன் காணப்படுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “40 வயதில் ஒருத்தி 25 வயது பெண்ணைப் போலக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது எனது ஐடியா இல்லை; மாறாக, 20-களில் இருக்கும் பெண்கள் தங்களது 40 வயதிலும் அழகாகவும், சாதிக்கக் கூடியவர்களாகவும் மாற ஆசைப்படலாம் என்பதை உணர்த்துவதே எனது நோக்கம்” என்ற அர்த்தமுள்ள வாக்கியத்தைப் பகிர்ந்துள்ளார்.
திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் த்ரிஷாவின் இந்த எளிய மற்றும் எதார்த்தமான வயது குறித்த பதிவு, தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையம் எங்கும் செம ட்ரெண்டாகி வருகிறது.
