பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஜுனியா தேவி என்ற பெண்ணின் வீடு தேடி, காவி உடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் வந்துள்ளார். தான் 18 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவருடைய மகன் எனக் கூறி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களை துல்லியமாகக் குறிப்பிட்டு உணர்ச்சிப்பூர்வமாக நாடகமாடியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய பெற்றோர் மற்றும் கிராம மக்கள், அவர் நடத்திய ஆன்மிக சொற்பொழிவுகளையும் கேட்டு அவரை முழுமையாக நம்பியுள்ளனர். கிராமத்தில் பிக்ஷை எடுத்து உணவருந்தி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குருநாதரைச் சந்திக்க கோரக்பூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், தொலைபேசி மூலம் குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட அந்த நபர், தனது குருநாதர் தன்னை சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், வளர்த்த செலவிற்காகப் பணம் கேட்பதாகவும் கூறி அழுதுள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மகனை மீண்டும் இழக்க விரும்பாத அந்த ஏழைக் குடும்பத்தினர், தங்கள் நிலத்தை அடகு வைத்து ரூ.3.35 லட்சத்தை ஆன்லைன் மூலம் அவசரமாக அனுப்பியுள்ளனர்.
பணம் கைமாறிய அடுத்த நாளே அந்த நபரின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், கிராம மக்களிடம் பேசி குடும்பப் பின்னணியைத் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு இந்த நூதன மோசடியை அவர் அரங்கேற்றியது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள போலி சாமியாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
