ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணிக்கு அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெறும் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, தனது ஐபிஎல் வாழ்க்கையின் அதிவேக அரைசதத்தையும் இப்போட்டியில் பதிவு செய்தார். கடைசி ஓவரில் அவர் அடித்த அசாத்தியமான சிக்ஸர் மூலம், ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது சாம்பியன் மகுடத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது.
𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶’𝘀 𝗺𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗱𝗮𝗻𝗰𝗲 𝗳𝗹𝗼𝗼𝗿 😉
Pure vibes. Wholesome. And so much more. Anushka Sharma, thank you for being our Day 1. ❤️ pic.twitter.com/7Qmxxv6QtG
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 1, 2026
கடந்த ஆண்டு இதே மைதானத்தில்தான் ஆர்சிபி அணி தனது 18 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் கோப்பையை வென்றிருந்தது. இந்நிலையில், அடுத்த ஓராண்டிற்குள்ளேயே இரண்டாவது கோப்பையையும் முத்தமிட்டுள்ளதால் ஆர்சிபி முகாமில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. போட்டி முடிந்ததும் ஆர்சிபி அணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அணியின் இந்த எல்லையற்ற மகிழ்ச்சி தெளிவாகத் தெரிகிறது.
மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா, சக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து வெற்றிக் களிப்பில் நடனமாடி மகிழ்ந்தார். இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
