ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் யாரும் எதிர்பாராத மாபெரும் சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் தனது அதிரடி ஆட்டத்தால் ரன் வேட்டையாடிய அவர், விராட் கோலி, சுப்மன் கில், ஹென்ரிச் கிளாசென் போன்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி, அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ‘ஆரஞ்சு தொப்பி’யைக் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, இந்த சீசனின் ‘மிக மதிப்புமிக்க வீரர்’, ‘வளர்ந்து வரும் இளம் வீரர்’, ‘சூப்பர் ஸ்ட்ரைக்கர்’ மற்றும் ‘சூப்பர் சிக்ஸர்’ உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் அள்ளியுள்ளார்.
இந்த அசாத்திய வெற்றியால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும், அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. அவரது உடற்தகுதி குறித்தும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், முகமது கைஃப் போன்ற முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிய சூர்யவன்ஷி, “தற்போது அதிக நேர்காணல்களில் பங்கேற்பதால் சற்று அழுத்தம் இருப்பது உண்மைதான். ஆனால், அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது; சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றியமைக்க பழகி வருகிறேன்” என்றார். மேலும், நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட காயங்களின்றி உடற்தகுதியைப் பேணுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ளதாகவும், மூத்த வீரர்களும் நிர்வாகமும் தனக்கு பக்கபலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருதுகள் மூலம் 45 லட்ச ரூபாய் பரிசு தொகையையும் ஒரு டாடா கார் ஒன்றையும் அவர் பரிசாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
