ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவு கணக்கை இணையத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போதைய நவீன நகர வாழ்க்கையின் செலவுகள் குறித்த விவாதத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது. கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றும் ககன் சைனி என்பவர் பகிர்ந்துள்ள இந்த விவரங்களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இத்தம்பதியினரின் வீட்டு வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் ரூ.50,800 ஆகவும், மளிகைப் பொருட்கள் வாங்கிய செலவு ரூ.27,702 ஆகவும் இருந்துள்ளது. இது தவிர, லேப்டாப் தவணை முறை கட்டணம் (EMI), வீடியோ எடிட்டர் மற்றும் மேலாளருக்கான ஊதியம் என ககனின் தொழில் சார்ந்த செலவுகள் ரூ.38,000-ஐத் தாண்டியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Gagan Saini (@03gagan)

மேலும், ரிஷிகேஷ் சுற்றுலாவுக்கு ரூ.22,000, ஏசி பழுதுபார்ப்பு மற்றும் திருமணப் புகைப்படக் கலைஞர், பரிசுகள் போன்ற இதர செலவுகளையும் சேர்த்து மொத்தம் ரூ.1.59 லட்சம் செலவாகியுள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார். ஆடம்பரத்திற்காக அல்லாமல், தரவுகளின் அடிப்படையில் மற்றவர்கள் தங்களின் நிதிநிலையைச் சரியாகத் திட்டமிட உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பட்ஜெட்டைப் பகிர்ந்ததாக ககன் சைனி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் இன்ஸ்டாகிராம் மற்றும் ரெடிட்போன்ற சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. டெல்லி-என்சிஆர் போன்ற பெருநகரங்களில் வசிக்கும் இரட்டை வருமானம் ஈட்டும் தம்பதிகளுக்கு, தற்போதைய விலைவாசி உயர்வின்படி மாதம் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை செலவாவது சாதாரணமான ஒன்றுதான் எனப் பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், இந்தத் தம்பதியின் அசுரத்தனமான சேமிப்புப் பழக்கம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இவர்களது மொத்த மாதாந்திர வருமானம் ரூ.3.8 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், தங்களின் அத்தியாவசிய மற்றும் ஆடம்பரச் செலவுகள் போக, மீதமுள்ள ரூ.2.2 லட்சத்தை மிகச் சரியாக முதலீடு செய்துள்ளனர். அதாவது, தங்களின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலாகச் சேமித்து, நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்துள்ள இவர்களது உத்தி, தற்போதைய இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என நிதி ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.