அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அண்மையில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் விரிவான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகளை டிரம்பின் தனிநபர் மருத்துவர் சீன் பார்ப்பெல்லா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் சீன் பார்ப்பெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜனாதிபதி டிரம்புக்கு சிடி ஸ்கேன் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் இதய பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் 22 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனை முடிவுகளின்படி, ஜனாதிபதி டிரம்ப் மிகவும் நல்ல உடல்நலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதியாகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவர் முழுமையான உடல் தகுதியைப் பெற்றுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டிரம்ப் 104 கிலோ எடையுடன் இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது இருந்த எடையை விட, தற்போது அவருக்கு 6 கிலோ எடை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் தனது எடையைக் குறைப்பதற்கான உணவு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றவும், முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் குழுவினர் சில முக்கிய வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.