மதுரை மாட்டுத்தாவணி மத்திய பேருந்து நிலையத்தில், போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குள்ள பேருந்துகள் எந்த ஊருக்குச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூற மறுப்பதோடு, பேருந்துகளில் முறையான வழித்தடப் பெயர்ப் பலகைகளும் (போர்டு) வைக்கப்படுவதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர். மேலும், சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்திற்காகக் காத்திருந்தும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் எந்தவித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

 

 

இந்தப் போராட்டத்தின் போது, பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளிடம் கூடுதலாக ரூ.150 வரை கமிஷன் கேட்பதாகப் பயணிகள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர். நீண்ட நேரமாகக் காத்திருந்தும் பேருந்துகள் இயக்கப்படாததாலும், ஊழியர்களின் அலட்சியப் போக்காலும் பொறுமையிழந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையப் பகுதியில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.